Tuesday, 11 June 2013

முதல் மாற்றான் இரட்டையர்!

‘கருமுட்டை இரண்டாகப் பிரிந்து விடுவதால் இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன’ என்பதை விஞ்ஞானிகள் வெகு காலத்துக்கு முன்பே கண்டு பிடித்துவிட்டனர். ஆனால் அவர்களை வாட்டிய முக்கியமான கேள்வி, ‘சில இரட்டையர்கள் மட்டும் ஏன் ஒட்டிப் பிறக்கிறார்கள்?’ என்பதுதான். ஒருவழியாக அதற்கும் விடை கிடைத்தது.
எதனால் இரட்டைக் குழந்தைகளில் சில ஒட்டிப் பிறக்கின்றன? அறிவியல் இதற்கு இரண்டு வித காரணங்களைக் கூறுகிறது. ஒன்று, பல விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஃபிஷன் (Fission) தியரி. இதன்படி கருமுட்டை இரண்டு தனித்தனிக் குழந்தைகளாகப் பிரிவதற்கு முயற்சிக்கும்போது,   அந்த முயற்சியின்   நடுவே எதனாலோ தடை ஏற்பட, இதன் காரணமாக இரட்டையர்கள் ஒட்டிப் பிறக்கிறார்கள்.

இரண்டாவது, ஃப்யூஷன் (Fusion) தியரி. இது நீண்டகாலமாகவே சில விஞ்ஞானிகளால் கூறப்பட்டு வருகிறது. இதன்படி கருத்தரித்த முட்டை தொடக்கத்தில் இரண்டாகப் பிரிந்து, இரண்டு   தனித்தனி குழந்தைகளாகத்தான் உருவாகின்றன. ஆனால், கருப்பையில் அருகருகே இருக்கும்போது இந்த இரண்டு கருக்களும் ஏதோ ஒரு பகுதியில் ஒன்றோடொன்று இணைந்து விடுகின்றன. ‘மாற்றான்’ திரைப்படத்தில் வருவதுபோல ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்கள் மிகவும் அரிதானவர்கள் என்பது தெரிந்தது தான். உயிரோடு பிறக்கும் குழந்தைகளில் இரண்டு லட்சத்திற்கு ஒருவர்தான் (அதாவது இரண்டு பேர்தான்!) இப்படிப் பிறக்கிறார்கள். இப்படிப் பிறக்கும் இரட்டையர்களில் 85 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு மேல் உயிரோடு இருப்பதில்லை.

ஒட்டிப் பிறக்காத இரட்டையர்களில் ஒருவர் ஆணாகவும், ஒருவர் பெண்ணாகவும் இருக்கலாம். ஆனால் ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்கள் இருவருமே ஆண்களாகவோ அல்லது இருவருமே பெண்களாகவோதான் இருப்பார்கள். காரணம், அவர்கள் ஒரே கரு முட்டையிலிருந்து உருவானவர்கள். பெரும்பாலும் இப்படி பெண்கள் பிறப்பதற்கே வாய்ப்பு அதிகம். இந்த மதம் அல்லது இந்த இனத்தைச் சேர்ந்தவர்களிடையேதான் ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்கள் அதிகம் என்று எதுவும் கிடையாது. உலகெங்கும் இப்படிப் பிறக்கிறார்கள். உலகப் புகழ்பெற்ற சயாம் இரட்டையர்களே முதன் முதலில் ஒட்டிப் பிறந்தவர்கள் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. சரித்திரப் பதிவுகளின்படி முதன்முதலில் ஒட்டிய இரட்டையர்கள் பிறந்தது, அர்மீனியாவில்தான்.

அங்கு இரண்டு ஆண் குழந்தைகள் இடுப்பிலிருந்து வயிறு வரை ஒட்டிப் பிறந்தார்கள். அறுவை சிகிச்சை மூலம் அவர்களை பிரிக்கும் முயற்சியில், ஒரு குழந்தை இறந்துவிட்டது. அடுத்த மூன்றே நாட்களில் மற்றொரு குழந்தையும் இறந்து விட்டது. கி.பி 1100ல் இங்கிலாந்தில் உள்ள கென்ட் மாகாணத்தில் பிறந்த மேரியும், எலிசாவும் இடுப்பிலிருந்து தோள் வரை ஒட்டிப் பிறந்தவர்கள். ஈருயிர் ஓர் உடலாக 34 வருடங்கள் வாழ்ந்தார்கள். இவர்களில் ஒருத்தி இறந்துவிட, மற்றவளும் அடுத்த சில மணி நேரங்களிலேயே இறந்தாள். இறப்பதற்கு முன், ‘‘நாங்கள் ஒன்றாகவே வந்தோம். ஒன்றாகவே செல்வோம்’’ என்றாளாம். ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக முதன் முதலில் பிரிக்க முடிந்தது கி.பி 1689ல்தான். ஜெர்மானிய மருத்துவர் கோனிக் என்பவர் இந்தச் சாதனையைச் செய்தார். இப்போது பிரபல சயாம் இரட்டையருக்கு வருவோம்.

எங்க், சாங்க் என்று பெயரிடப்பட்ட இவர்கள் இருவரும் தாய்லாந்தில் (இந்த நாட்டின் அப்போதைய பெயர்தான் சயாம்) 1811ல் பிறந்தார்கள்.  சிறு வயதில் வீட்டில் அம்மாவுக்கு உதவியாக இருந்தார்கள். பின்னர் தங்களையே கண்காட்சிப் பொருளாக ஆக்கிக் கொண்டு, உலகெங்கும் வலம் வந்தார்கள். இறுதியில் அமெரிக்காவில் குடி புகுந்தனர். இரு சகோதரிகளை மணந்து கொண்டு, இரண்டு டஜன் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். தங்களது 63வது வயதில் இறந்தனர். அவர்களின் வம்சாவளியில் இரட்டையரும் உண்டு. ஆனால் ஒட்டிப் பிறக்கவில்லை. தலையோடு ஒட்டிப் பிறந்த முதல் இரட்டையர்கள் பிறந்தது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில். இருவருக்கும் தனித்தனி மூளைகள் என்றாலும், ஒரே ரத்த ஓட்டம்தான். இந்தச் சகோதரிகள் பின்னாளில் பாடகிகளாக உருவெடுத்தனர். நர்ஸிங் கல்வியில் சேர்ந்தனர். ஆனால் பட்டம் பெறுவதற்கு சில மாதங்களுக்குமுன் அவர்கள் பரிதாபமாக இறந்துவிட்டனர்.

No comments:

Post a Comment